Saturday, March 8, 2008

ஆலயங்கள் எதற்கு?

ஆண்டவனை ஒரு குறிப்பிட்ட வடிவில் பிரதிஷ்டை செய்து, அபிஷேக அலங்காரம் செய்து வழிபடுவதன் தாத்பர்யம் என்ன?

கல்வியறிவை யார் வேண்டுமானாலும், சுயமாக அல்லது நூல்கள் மூலம் பெறலாம். இருந்தாலும் பள்ளிக்கூடம் என்று ஒன்று இருப்பது, கல்வியை முறையாக, படிப்படியாகக் கற்று, அறிவை வளர்ப்பதற்குத்தான். அதுபோல்தான் ஆலயங்கள்.இறைவனுக்கு மூன்று முக்கிய பரிமாணங்கள் உண்டு. ரூபம் (வடிவம்), நாமம் (பெயர்), குணம் (தெய்வீகத்தன்மைகள்) ஆகியவை அந்தப் பரிமாணங்கள். நமது புராண இதிகாசங்கள் இறைவனை இந்த மூன்று வகையிலும், இன்னும் பல பரிமாணங்களிலும் சித்திரித்திருக்கின்றன. இவற்றின் வெளிப்பாடாகத்தான் ஆலயங்கள் அமைந்துள்ளன.ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஒரு ஸ்தலப்புராணம் உண்டு. அவை ஆலயத்தின் பெருமையை, ஸ்தலம் (இடம்), விருக்ஷ்ம் (மரம்), தீர்த்தம் (புண்ணிய நீர்), மூர்த்தி (இறைவனின் வடிவம்) ஆகிய பரிமாணங்களால் விளக்குகின்றன.நமது திருக்கோயில்களை ஆதிசங்கரர் வகுத்த ஆறு இஷ்ட தெய்வ வழிபாட்டின் அடிப்படையில் வரிசைபடுத்தலாம். அவை முறையே கணபதி, சிவன், முருகன், விஷ்ணு, சக்தி, சூரியனும் நவக்கிரகங்களும் ஆகிய ஆறு தெய்வங்களை முக்கியமாகக் கொண்டு அமைகின்றன. இவை தனித்தனியாகவோ அல்லது ஒரே ஆலயத்தில் பல்வேறு அங்கங்களாகவோ அமைந்திருப்பது நமது ஆலயங்களின் சிறப்பு."கோயில் முழுதும் மட்டும் கண்டு பயனில்லை, உள்ளத்தில் கண்டால்தான் கோயில் உள்ளேயும் காணமுடியும்" என்ற கருத்தை தேசிக விநாயகம் பிள்ளை தன் பாடல் ஒன்றில் வலியுறுத்தியுள்ளார். அதன்படி நாம் எல்லோரும் உள்ளத் தூய்மையால் இறைவனை உணர்ந்து, இவ்வாலயங்கள் மூலம் இறைவனது பல்வேறு பரிமாணங்களை தரிசித்து, உயர்ந்த ஞானமும் எல்லா நலமும் பெற்று வாழ இறைவன் அருள் புரியட்டும்